அரசியலமைப்பை மீறியவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்: சஜித் கேள்வி 

அரசியலமைப்பை மீறியவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்: சஜித் கேள்வி 

அரசியலமைப்பை மீறியவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்: சஜித் கேள்வி 

எழுத்தாளர் Bella Dalima

26 Oct, 2019 | 7:57 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஹோமாகம நகரில் இன்று நடைபெற்றது.

அம்பிலிப்பிட்டி – கொலன்ன பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கொலன்ன தொகுதி அமைப்பாளர் டீ.அபேநாயக்க இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மிளகு மீள் ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்வதாக உறுதியளித்தார்.

கொலன்ன தொகுதியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் புதிய தொழிற்துறைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

கொலன்ன தேர்தல் தொகுதியில் 5000-இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, அவர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி. ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்தது நினைவிருக்கிறதா? சட்டரீதியான அரசாங்கத்தினை சூழ்ச்சி செய்து கைப்பற்றி கார்ட்போர்ட் பிரதமரின் கீழ் திருட்டு அமைச்சரவையை நியமித்தனர். அந்த திருட்டு அமைச்சரவைக்கு 52 நாட்கள் தான் ஆயுட்காலம். இவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? அரசியலமைப்பினை மீறியவர்கள் அரச அதிகாரத்தினை பெற்றுக்கொண்டால் இவ்வாறு சுதந்திரமாக கூட்டத்தினை நடத்த முடியாது என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கின்றேன். வேறு வகையில் கூறுவதானால் வௌ்ளை வேனில் வந்து கடத்திக்கொண்டு செல்வார்கள்

என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இறக்குவானை நகரில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது,

பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு கடந்த காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கினோம். வெட்கமின்றி மொட்டுத் தலைவர்கள் முறைப்பாடு செய்து கொடுப்பனவினை நிறுத்தியுள்ளனர். எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது 24 மணித்தியாலங்களுக்குள் 20 ,000 ரூபா கொடுப்பனவை பொலிஸாருக்கு வழங்குவேன்

என சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்