வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரை கைது செய்ய உத்தரவு

போலி பத்திரம் தயாரித்து காணி விற்பனை: வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரை கைது செய்யுமாறு உத்தரவு

by Staff Writer 25-10-2019 | 7:26 PM
Colombo (News 1st) போலி காணி உறுதிப்பத்திரம் தயாரித்து தலைமன்னாரில் 80 ஏக்கர் காணியை விற்பனை செய்தமை தொடர்பில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உள்ளிட்ட சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (24) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மொஹமட் அப்துல் காசிம் என்பவரின் காணியை போலி ஆவணம் தயாரித்து மற்றுமொருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போலி ஆவணம் தயாரிக்க உதவிய நொத்தாரிசு, பதிவாளர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்றைதினம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பினனர் பல தடவைகள் தொலைபேசியூடாக முறைப்பாட்டாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நகர்த்தல் பத்திரத்தினூடாக, முறைப்பாட்டாளர் மீதான மரண அச்சுறுத்தல் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உரிய விசாரணைகளை நடத்தி, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகி, மரண அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முறைப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.