கொலைகார கலாசாரத்தை உருவாக்க மாட்டோம்: சஜித் பிரேமதாச

by Bella Dalima 25-10-2019 | 9:06 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட பொதுக்கூட்டம் இன்று கம்புருப்பிட்டி நகரில் இடம்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,
கடந்த காலங்களில் ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்றதைப் போன்று, தண்ணீர் கேட்டு போராடும் போது நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டோம். எரிபொருள் மானியம் கேட்கும் போது கொலை செய்ய மாட்டோம். ஊழியர் சேமலாப நிதிக்காக மக்கள் வீதியில் இறங்கி போராடும் போது நாங்கள் கொலைகார கலாசாரத்தை உருவாக்குவதில்லை. இளைய சமூகத்தை நாங்கள் பாதுகாப்போம். மகளிர் படையணியை பாதுகாப்போம். இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாக எனது எதிரணியினர் கூறுகின்றனர். எவ்வாறு பாதுகாப்பான நாட்டை உருவாக்க முடியும் என்பதை நான் கேட்க விரும்புகின்றேன். ஆட்சியில் இருக்கும் போது இந்த மாவட்டத்தில், பிரதேச சபை தலைவர் ஒருவர் பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்.100 ஆவது துஷ்பிரயோகத்தை அவர்களின் வீட்டில் மேற்கொண்ட போது எனது எதிராளி பாதுகாப்பு செயலாளராக எங்கு இருந்தார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.
என குறிப்பிட்டார்.