கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

by Staff Writer 25-10-2019 | 3:26 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வௌியிடப்பட்டது. 'நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' எனும் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் வைபவம் இன்று கொழும்பு தாமரைத்தடாகத்தில் இடம்பெற்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டார். கொள்கை பிரகடனத்தின் பிரதிகள் ஜனாதிபதி வேட்பாளரினால் கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை ஒற்றையாட்சியின் கீழிருக்கும் நாடு, அதனை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கொண்டுள்ளோம். எமது நாட்டை பயங்கரவாதம், பாதாளக்குழுவினர், கொள்ளை, கப்பம் பெறுபவர்கள், வௌிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு தேவையான அரச பாதுகாப்பினை நாம் மீண்டும் உறுதிப்படுத்துவோம். நாட்டிற்கு பாதுகாப்பினை வழங்கும் அதேபோன்று எதிர்காலத்தில் பாதுகாப்பை வழங்கவுள்ள முப்படையினர் , பொலிஸார், சிவில் அமைப்பினரை நாம் பாதுகாப்போம். ஒரு நாட்டிற்குள் ஒரு சட்டம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாது, சட்டத்தை அனைவருக்கும் பொதுவான வகையில் நடைமுறைப்படுத்த நாம் வழிவகை செய்வோம். நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களை மீள கட்டியெழுப்புவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
என தமது வாக்குறுதிகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்தார்.

ஏனைய செய்திகள்