கொள்ளையிட்ட 9 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சியில் கொள்ளையிட்ட 9 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 25-10-2019 | 4:00 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் 2015 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி, அவரின் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு இன்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டார். பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கஞ்சா கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி கிளிநொச்சி 55 ஆம் கட்டை சந்தியில் ஒருவர் கடத்தப்பட்டார். இதன்போது, கடத்தப்பட்டவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கைச்சங்கிலி மற்றும் மோதிரம் ஆகியவற்றை பிரதிவாதிகள் திருடிச் சென்றுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு எதிராக சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் யாழ் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரச தரப்பு சட்டத்தரணியாக மாதினி விக்னேஸ்வரனும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியாக எஸ்.ஶ்ரீகாந்தாவும் மன்றில் ஆஜராகினர். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட போது வழக்கின் 3 ஆவது பிரதிவாதி மன்றில் ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாக பிரதிவாதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மனைவி மன்றுக்கு இன்று அறிவித்துள்ளார். இதன்போது, அவரை கைது செய்யுமாறு நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார். ஒன்பது குற்றவாளிகளும் சட்ட விரோதமாக ஒன்றுகூடியமைக்கு 5 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், இரண்டாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார். ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டிற்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்திலிருந்து குற்றவாளி ஒருவர் தப்பியோடிய போது, சிறை அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்