ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்கின்றனர்: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 25-10-2019 | 9:10 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க நேற்று (24) பிற்பகல் அக்கரைப்பற்றில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க, நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதோடு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார். மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்த பலர் ஒன்றாக சேர்ந்து திருடியதுடன், மக்களின் பணத்தை வீண் விரயம் செய்ததாக அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டினார்.
2015 ஆம் ஆண்டு ராஜபக்ஸ அரசாங்கம் வீழச்சியடைந்த பின்னர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்றார். கோட்டாபய ராஜபக்ஸ வீட்டில் இருந்த யானைகளை இராணுவத்திற்கு வழங்கிவிட்டு, வீட்டில் இருந்த பாரிய மீன் தொட்டியை உடைத்துவிட்டு மிரிஹானையில் உள்ள வீட்டில் ஒளிந்துகொண்டார். மஹிந்த ராஜபக்ஸ ஒரு வாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தார். ஏன் என்றால் அவர்கள் அச்சமடைந்திருந்தனர். சமல் ராஜபக்ஸவின் வீட்டில் நாமல் ராஜபக்ஸவை கண்டதாக மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார். நாமல் ராஜபக்ஸ நடுங்கிக்கொண்டிருந்தாராம். 2015 ஆம் அண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு உயிரை மீள வழங்கியது யார்?அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ஸ எவ்வாறு இலங்கைக்கு வந்தார்? சிறையில் அடைக்கப்படவிருந்த கோட்டாபய ராஜபக்ஸ எவ்வாறு வெளியில் வந்தார்? மக்களின் சொத்துக்களை சூறையாடிய நாமல் ராஜபக்ஸ எவ்வாறு வெளியில் வந்தார்? ஒருவரை ஒருவர் இவர்கள் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
என அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.