கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை

கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2019 | 9:59 pm

Colombo (News 1st) கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்காக நேற்று (24) நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைதியின்மையில் முடிவுற்றது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூஃபின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக்கின் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனையடுத்து, அப்துல்லாஹ் மஹ்ரூஃபின் ஆதரவாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக்கின் ஆதரவாளர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாலை 6.15 அளவில் பலத்த பாதுகாப்புடன் பிரதேசத்திற்கு சென்று பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது,

நேற்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கு கல்நாட்டும் நிகழ்வினை செய்திருக்கின்றார். அதனை ஆரம்பிப்பதற்கான முழு முயற்சியும் என்னால் செய்யப்பட்டது என்பது மக்கள் அறிந்த விடயம். அதில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹூரூப் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க பல்கலைக்கழக கல்லூரி அமைவதாக கல்வெட்டில் இட்டுள்ளார்கள். அவருக்கும் பல்கலைக்கழக கல்லூரிக்கும் எதுவித தொடர்பும் இல்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சராக கடந்த ஏழு மாதத்திற்கு முன்னர் தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக வருவதற்கு முன்னர் எங்களுடைய வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடிக்கல் நாட்ட சென்ற வேளையில் என்னையும் அழைத்திருக்க வேண்டும். அதுதான் அரசியல் நாகரிகமும் கூட.

என M.S.தௌபீக் விளக்கமளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்