கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 50,000 பேர் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 50,000 பேர் வெளியேற்றம்

கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 50,000 பேர் வெளியேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2019 | 5:03 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக 50,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிட்டா நகரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் காடுகள் உள்ளன. நேற்று (24) பிற்பகல் அப்பகுதியில் உள்ள காடுகளில் காட்டுத்தீ பற்றியது. அதிவேகமாக பரவிய காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அப்பகுதியில் 5,000 ஏக்கர் அளவிலான காடுகள் தீக்கிரையாகின.

தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்களும், மீட்புப்படையினரும் போராடி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள், எயார் டேங்கர்கள் முயற்சியோடு தீயை அணைத்து வருகின்றனர்.

கடுமையான சூறைக்காற்று, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவியுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், வடக்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள ஒயின் கண்ட்ரி பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அப்பகுதியில் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நூறு ஏக்கர்களில் பற்றிய காட்டுத்தீ, 16,000 ஏக்கர்கள் அளவிற்கு பரவியுள்ளதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்