வீழ்ச்சியடைந்த அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்புவோம்: கோட்டாபய வாக்குறுதி

by Bella Dalima 24-10-2019 | 8:58 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கண்டி மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். கடும் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கண்டி - வத்தேகமவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தாம் கட்டியெழுப்பிய பொருளாதாரம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளதாகவும் வேலைத்திட்டங்களைக் கொண்டுள்ள, எதிர்கால சமூகத்தினர் தொடர்பில் திட்டங்களை முன்னெடுக்கும் ஒருவரை தாம் நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ,
செயற்பாட்டு ரீதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கத்தினை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். நாங்கள் அன்று அரச சேவையில் திறமையானவர்களை இணைத்துக்கொண்டு செயலாற்றியமையால் தான் எங்களுக்கு யுத்தத்தினை வெற்றிகொள்ள முடிந்தது. அதேபோல், விரைவான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையிருந்தது. சிரேஷ்டத்துவத்தினை பார்க்காது தகுதியான, திறமையானவர்களுக்கு இடமளித்தோம். அதேபோல், அரச துறையிலும் திறமையானவர்களுக்கு இடத்தினை வழங்கினோம். அவர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரங்களை வழங்கினோம். இந்த அரசங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் செயலாளர்கள், அரச சேவையாளர்களை நீதிமன்றத்திற்கும், FCID-க்கும் கொண்டு சென்றனர். அவர்களை பயமுறுத்தினர். நாங்கள் வீழ்ச்சியடைந்த அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
என குறிப்பிட்டார்.