போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: சஜித் பிரேமதாச

by Bella Dalima 23-10-2019 | 8:57 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் இன்று கலந்துகொண்டிருந்தார். இதன்போது, எந்த மதத்தினையும் இனத்தையும் வேறுபடுத்தாது பெளத்த சமயத்திற்கு முன்னுரிமையளித்து, முழு நாட்டினையும் ஐக்கியப்படுத்தும் புதிய யுகத்தினை உருவாக்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். சிறிய குழுவினர் பயங்கரவாத செயற்பாட்டினை முன்னெடுப்பார்கள் என்பதாலும், மனிதப்படுகொலை செய்வார்கள் என்பதாலும் முழு இனத்தையும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கம்பஹா - கட்டான பகுதியில் நேற்று (22) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஏப்ரல் 21 தாக்குதல் போன்று மேலுமொரு தாக்குதல் நாட்டில் நடைபெறாமல் இருப்பதற்காக சரத் பொன்சேகாவிற்கு பொறுப்பு வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். அவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் அனைத்து பயங்கரவாதிகளையும் அழித்து விடுவதாக அவர் கூறினார். பயங்கரவாதம் காரணமாக தனது தந்தையை இழந்ததை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாச, நாட்டில் எந்தவொரு குடும்பமும் அவ்வாறான துயரை எதிர்கொள்ள இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
புதிய இலக்குடன் செயற்படுவதாகக் கூறும் எனது பிரதிவாதி, நீர்கொழும்பிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கையை உயர்த்திக்கொண்டு போதையை ஒழிப்பதாகக் கூறுகின்றார். பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் இங்கு இல்லையா? ஹெலிகொப்டரில் இறங்கி கட்டி அரவணைத்துக்கொண்டு நான் உங்களை பாதுகாப்பேன் என போதைப்பொருள் கடத்தல்காரருக்கு யார் கூறியது? போதைப்பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பதையா தேசிய பாதுகாப்பு என்று கூறுவது? முன்னால் ஜனாதிபதி தீர்மானம் எடுப்பதில் வெட்கப்படுகின்றார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவீர்களா என ஒருவர் அவரிடம் கேட்டுள்ளார். நான் அதற்கு அவ்வளவு விருப்பமில்லை என அவர் கூறியுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனைவருக்கும் உறுதியாக மரண தண்டனை வழங்க வேண்டும்.
என சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.