நிதி அமைச்சினால் வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு

by Staff Writer 23-10-2019 | 5:48 PM
Colombo (News 1st) நிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி,
  • வாகனங்களுக்கான சொகுசு வரி அறவீட்டின் போது, இயந்திர கொள்ளவிற்கு பதிலாக வாகன வகைகளின் அடிப்படையில் வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி அந்நிய செலாவணி ஊடாக முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது 3.5 வீத வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • வாகனங்களுக்கான கார்பன் வரியை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கையடக்கத் தொலைபேசிகளின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
  • 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த தொகையில் குத்தகைக்கு வழங்கப்படும் வீடுகளுக்கான பெறுமதிசேர் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
  • சிகரெட்களுக்கு வழங்கப்பட்டிருந்த தேச நிர்மாண வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளது.
  • பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 14 நாட்களுக்குரிய இணை கொடுப்பனவை 20 நாட்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அலுவலக பணியாளர்களின் சீருடைக்கான வருடாந்த கொடுப்பனவு 1000 ரூபாவாலும், மூக்கு கண்ணாடிக்கான கொடுப்பனவு 3000 ரூபாவாலும், பாதணிகளுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • முதலீட்டு சபையின் அனுமதியின் கீழ், ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கும்போது அறவிடப்படும் VAT, 75 வீதத்தில் இருந்து 100 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • அரசாங்க ஊழியர்கள் சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட கடன், 4000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அறவிடப்படும் வட்டி 1.2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.