கெரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவு

கெரி ஆனந்தசங்கரி மீண்டும் கனேடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு

by Staff Writer 23-10-2019 | 7:09 PM
Colombo (News 1st) கெரி ஆனந்தசங்கரி மீண்டும் கனேடிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். ஒன்டாரியா மாகாணத்தில் ஸ்கார்பரோ ரூஜ்பார்க் தொகுதியில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி 62 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். கெரி ஆனந்தசங்கரி கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, தேர்தலில் 62.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஸ்கார்பரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். கெரி ஆனந்தசங்கரி இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் இளைய புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக அவர் கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்தார். கனடாவில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுப்பதால், கெரி ஆனந்த சங்கரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.