21/4தாக்குதல்:பாராளுமன்ற குழு அறிக்கை சமர்ப்பிப்பு

ஏப்ரல் தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற குழு அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு

by Bella Dalima 23-10-2019 | 8:19 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த தெரிவுக்குழுவின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, தெரிவுக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் சஹ்ரானை சந்தித்தமை மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை சந்தித்தமை தொடர்பில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். எனவே, இவ்வாறான உறுப்பினர் ஒருவருடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றமும் நாடும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார். எனினும், மே மாதம் 23 ஆம் திகதி சபாநாயகரால் அவரின் பெயர் அறிவிக்கப்பட்ட போது எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். மேலும், தினேஷ் குணவர்தனவின் கருத்திற்கு நகர திட்டமிடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூவ் ஹக்கீம் பின்வருமாறு பதில் அளித்தார்.
எங்கிருந்தாவது கிடைத்த வீடியோவை அல்லது புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னை பயங்கரவாதியுடன் இணைத்து பேசுகின்றார். எனக்கு தொடர்பு இருந்ததாகக் கூறும் இந்த பொய்யான கருத்து தொடர்பில் நான் கவலையடைகின்றேன். உண்மையில் இதனை விட சிறந்த சில புகைப்படங்களை நான் காண்பிக்கின்றேன். எவ்வாறானவர்களை நீங்கள் நியமித்துள்ளீர்கள் என்பதை பாருங்கள். அதனை பார்த்து விட்டு எனது பக்கம் விரலை நீட்டுங்கள். இது அநீதியான விடயம். நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட எம்மிடம் கேட்டனர். எமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று கூறியவர்கள் குறுகிய அரசியல் நோக்கத்தோடு இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் கவலையடைகின்றோம்.

ஏனைய செய்திகள்