லசந்த விக்ரமதுங்கவின் மகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

by Staff Writer 22-10-2019 | 4:51 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைக்கு எதிராக அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமக்கு எதிரான வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அஹிம்சா விக்ரமதுங்க, கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பரிசீலனை செய்யவோ, அது தொடர்பில் சட்டரீதியிலான தீர்மானமொன்றை எடுக்கவோ அல்லது தீர்ப்பளிக்கவோ தமக்கு அதிகாரமில்லை என கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. வௌிநாட்டு விடுப்புரிமை சட்டத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரம் தமக்கு இல்லையெனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக சேவையாற்றிய காலத்திலேயே கோட்டாபய ராஜபக்ஸ இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லசந்த விக்ரமதுங்க கொலை, சிவில் யுத்தம், ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. எவ்வாறாயினும், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீடு செய்வதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் நீதவானுக்கு அறிவித்துள்ளார்.