சிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பொதுத்தேர்தல்: சிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

by Bella Dalima 22-10-2019 | 5:30 PM
Colombo (News 1st) கனேடிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், கடந்த தவணையில் அந்தக் கட்சிக்கிருந்த பெரும்பான்மை தற்போது இல்லாமற்போயுள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 20 ஆசனங்களை இழந்துள்ளதுடன், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 26 ஆசனங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. எவ்வாறாயினும், லிபரல் கட்சி சிறுபான்மை அரசொன்றை அமைக்கும் அளவிற்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 2015 ஆம் ஆண்டு வாக்குப் பதிவு 68 வீதமாக இருந்த நிலையில், இம்முறை அது குறைவடைந்து 62 வீதமாகப் பதிவாகியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை இம்முறை ட்ரூடோ எதிர்கொண்டார். இதன்படி, இம்முறை லிபரல் கட்சி 110 ஆசனங்களையும் கன்சர்வேட்டிவ் கட்சி 79 ஆசனங்களையும் புதிய ஜனநாயகக் கட்சி 17 ஆசனங்களையும் Bloc Québécois கட்சி 14 ஆசனங்களையும் பசுமைக் கட்சி 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மை ஆட்சியை அமைக்க 170 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டிய பட்சத்தில், பிரதமர் ட்ரூடோவின் கட்சி அதனைப் பெற தவறியுள்ளது. இதனால் சிறுபான்மை ஆட்சியை அமைக்கும் நிலைக்கு லிபரல் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனேடிய பாராளுமன்றத்தின் 43 ஆவது பொதுத் தேர்தல் நேற்று (21) நடைபெற்றது.