பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2019 | 3:46 pm

பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வா என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக்கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை AGS என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி வௌியாகவுள்ளது.

இதனிடையே, உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் தன்னுடைய கதையைத் திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்குத் தொடர செல்வா என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இருப்பினும், பிகில் படத்தின் வெளியீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் பிகில் படத்திற்கு தடை எதுவுமில்லை என அட்லீ தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்