பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் மீள பெறப்படும்: அனுரகுமார வாக்குறுதி

by Bella Dalima 22-10-2019 | 7:28 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் விவசாயம் தொடர்பிலான பட்டையம் இன்று பேராதெனியவில் வௌியிட்டு வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, நாட்டிலிருந்த 32,000 வாவிகளில் 14,000 வாவிகளே மீதமாக உள்ளதுடன், அவற்றில் 2,000 வாவிகளே பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதாக அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். விவசாய நிலங்கள் 50 வீதம் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வீடமைப்பு தொடர்பிலான கொள்கையில் மாற்றம் வேண்டும் எனவும், அரசாங்கம் நிர்மாணிக்கும் வீடுகள் மாடி வீடுகளாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் 20 இலட்சம் ஏக்கர் காணியை வீட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்த நேரிடும் என்பதால், நில பயன்பாட்டுத் திட்டம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து காணிகளையும் மீளப்பெற்று விவசாய சமூகத்திற்குக் கொடுப்பதாகவும் அவர் வாக்குறுதி வழங்கினார்.