ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி

ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 7:00 pm

Colombo (News 1st) ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஜப்பான் பேரரசர் நருகிடோவின் (Naruhito) முடிசூட்டு விழாவில் பங்கேற்றார்.

டோக்கியோ நகரின் இம்பீரியல் மாளிகையில் இந்த விழா இடம்பெற்றது.

பேரரசர் நருஹிடோ, மசாக்கோ பேரரசியுடன் அரச உடை அணிந்து இம்பீரியல் மாளிகையின் தலைமை அவைக்கு வருகை தந்ததை தொடர்ந்து விழா உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பெல்ஜியத்தின் பிலிப் இளவரசர், ஸ்வீடன் நாட்டு மன்னர், கட்டாரின் அமீர், சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்ட விசேட அதிதிகளும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ புகுடாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை நினைவுகூர்ந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பலப்படுத்துவதற்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி தமது பதவிக்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜப்பானின் முன்னாள் பிரதமர் இதன்போது பாராட்டியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமது பதவிக்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய விசேட ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நட்பு நாடு என்ற வகையில் ஜப்பானின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது நினைவுப்பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்கான ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டோக்கியோ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்