தபால்மூல வாக்களிப்பு; வாக்குச் சீட்டுகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகள் விநியோகம்

by Staff Writer 22-10-2019 | 7:57 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (21) முதல் தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தபால் மூல வாக்களிப்பின் பின்னர், அதனை மீண்டும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு  அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டைகளை வாக்காளர்களிடம் விநியோகிப்பதற்காக எதிவரும் 25 ஆம் திகதி சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 3 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும். அதன் பின்னரும் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு அட்டை கிடைக்கப்பெறாதோர் அருகிலுள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.