கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2019 | 9:25 pm

Colombo (News 1st) ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.

‘வெற்றிகொண்ட சுதந்திரத்தை பாதுகாப்போம், சர்வாதிகாரத்தைத் தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று இம்மாநாடு இடம்பெற்றது.

ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தலின் பின்னர் நாட்டின் ஊடகத்துறையின் சுதந்திரத்தை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.

எமது நாட்டில் சர்வதேச மட்டத்திலான ஊடக வள பயிற்சி நிலையமொன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றேன். அதன் மூலம் நாட்டின் உள்ளக ஊடகத்துறையையும் வெளிநாடுகளிலுள்ள திறமையுள்ள ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து தொழில் ரீியான தொடர்புகளை திருப்திகரமான நிலைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன். சவால்களுக்கு மத்தியில் நாம் ஊடக கிராமம் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், ஊடகவியலாளர்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, அந்த குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.

என சஜித் பிரேமதாச கூறினார்.

இதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யுத்தத்தின் பின்னர் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்