எம்மாலே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்

எம்மால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்த முடியும் - கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 21-10-2019 | 8:37 PM
Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று (21) ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பல கூட்டங்களில் கலந்துகொண்டார். பெலியத்த நகரில் இன்று முற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏமாற்ற முடியும் என சிலர் நினைக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு ஏமாற்றினர். 15 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பதாகக் கூறினர். புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கான உரிமைகளை விற்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை விற்பதற்கும் இடமளிக்க முடியாது. குறிப்பாக சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க இடமளிக்க முடியாது. எனினும் இந்த அரசாங்கம் இவற்றையே செய்தது. எனவே அவர்களுக்கு மக்களிடம் வாக்குகளைக் கேட்க எந்தவொரு உரிமையும் இல்லை
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு தேசிய பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லை. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டு வந்த எமது தரப்பினால் மாத்திரமே மீண்டும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அன்று ஆரம்பித்த அனைத்துத் திட்டங்களும் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள் ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தத் துறையில் மாத்திரம் 4 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. ஒன்றிணைந்து பணியாற்றக்கூடிய குழு ஒன்று இவர்கள் மத்தியில் இல்லை. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. எனவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமான தெளிவான திட்டமொன்று எம்மிடம் உள்ளது
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ பின்னர் ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்காக செயற்படுகின்றது என்பது தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தோம். ராஜபக்‌ஸ குடும்பத்துடனேயே எமது அரசியல் ஆரம்பமாகியது. அதனால் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவை வழங்க முடியும் என்பதையும் கூறினேன். எனினும் தனியாக வந்து பலனில்லை என அவர் எனக்குக் கூறினார். எமது தாய் வீடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. அந்தக் கட்சியிலேயே நாம் இணைய வேண்டும். அதன்படியே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒருவர் இருவருடைய ஆதரவை பெறுவது எமது நோக்கமாக இருக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஸவிற்காக கட்சியை ஒன்றிணைக்கக் கூடிய திட்டம் தொடர்பிலேயே சிந்திப்போம். இன்று அவருடன் பாராளுமன்றக் குழு மாத்திரம் இணையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த 14 இலட்சத்து 80 ஆயிரம் பேரும் அவருடன் இணைந்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேறு எவரும் தேவை இல்லை. நாம் இருக்கின்றோம்
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அன்று யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் பரிசீலிப்பதற்காக விசேட பிரிவொன்றை ஈடுபடுத்தினோம். அதற்காக புலனாய்வு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கினோம். எனினும் இந்த அரசாங்கம் அந்த அதிகாரிகளை வேறு பதவிகளுக்கு மாற்றியது. அந்த விசேட பிரிவை இல்லாமல் செய்தனர். அதன் காரணமாகவே வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் இந்தத் தாக்குதல் எப்போது இடம்பெறப்போகின்றது தாக்குதல் இடம்பெறும் இடம் மற்றும் தாக்குதல் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் தகவல்களை வழங்கியிருந்தனர். அவ்வாறு வழங்கிய போதிலும் ஏப்ரல் 21 தாக்குதலை அரசாங்கத்தினால் தடுக்கமுடியாமல் போனது. 6 மாதங்கள் கடந்தும் பாதுகாப்புத் திட்டமொன்றை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இவ்வாறு தெளிவான நோக்கில்லாமலே அரசாங்கம் செயற்படுகின்றது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.