அதிக மழை: கலாவெவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

அதிக மழை: கலாவெவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

அதிக மழை: கலாவெவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2019 | 2:59 pm

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் தெதுருஓயாவின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குருநாகலில் 132.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேநேரம், குறித்த காலப் பகுதிக்குள் ஆனமடுவ பகுதியில் 99.8 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மழையுடனான வானிலையால் கேகாலை, இரத்தினபுரி, மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (21) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று காலை பெய்த மழையினால் கொழும்பு – கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மழை காரணமாக புத்தளம் அநுராதபுரம் வீதிக்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, புத்தளம், நீர்கொழும்பு, கம்பளை ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்