மோசடிகளற்ற தேர்தல் இடம்பெறும்: நெதர்லாந்து வௌியுறவுத்துறை அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 19-10-2019 | 6:59 PM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகைதந்துள்ள நெதர்லாந்து வௌியுறவுத்துறை அமைச்சர் ஸ்டெப் பிளொக் (Stef Blok) இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது. இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தாம் பக்கசார்பின்றி செயற்படுவதாகவும் அமைதியான, ஜனநாயக முறையிலமைந்த மற்றும் ஊழல் மோசடிகளற்ற தேர்தலாக இம்முறை தேர்தல் இடம்பெறுமென தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெதர்லாந்து வௌியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். மேலும், பொலிஸ் மற்றும் முப்படை என்பன தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே, நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதேவேளை, பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு தியாக மனப்பான்மையுடன் கடமையாற்றுமாறு அவர்களுக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நெதர்லாந்தின் ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம் என நெதர்லாந்தின் வௌிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.