பளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி

பயிற்றுவிப்பாளரின்றி பளுதூக்கலில் தங்கம் வென்ற யாதவி

by Bella Dalima 19-10-2019 | 8:18 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஜெந்திரன் யாதவி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மாணவியாவார். பொலன்னறுவையில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் அவர் 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 45 கிலோகிராம் எடைப்பிரிவில் 82 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். ஜெந்திரன் யாதவியின் இந்த வெற்றியை கௌரவித்து பாடசாலையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கான கிராமப்புற பாடசாலையில் 110 மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்கும் நிலையில், பயிற்றுவிப்பாளரும் இல்லாத பட்சத்தில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். யாதவி பயிலும் மீசாலை மேற்கு கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை விளையாட்டுத்துறைக்கான எவ்வித வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான சூழலில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த யாதவி, 35 கிலோமீட்டர் தூரம் பஸ்ஸில் பயணித்து துரையப்பா விளையாட்டரங்கில் பயிற்சி பெற்று வருகிறார். போதிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டால், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் யாதவியை பிரகாசிக்க வைக்கமுடியும் என்பது நிதர்சனம்.