செழிப்பான நாட்டை உருவாக்குவதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதி

by Bella Dalima 19-10-2019 | 8:41 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ சில பொதுக்கூட்டங்களில் பங்கேற்றிருந்தார். கிரிபத்கொடயில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பை பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கோட்டாபய ராஜபக்ஸவே வேண்டும் என முழு நாடும் கோருவதாகக் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றுகையில், பாதுகாப்பான நாட்டை வழங்குமாறு மக்கள் தன்னிடம் கோருவதாகவும் அதனால் தமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள களனி பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை நாம் மேம்படுத்துவோம். அதன் ஊடாக பட்டப்படிப்பு நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்கி இளைஞர், யுவதிகளுக்கு அதிக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுப்போம். இந்த மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். 10 பில்லியன் டொலர் வரை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவேன். சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 7 மில்லியனாக மாற்றுவதற்கான திட்டம் எமக்குள்ளது. விமான நிலையங்களை அண்மித்துள்ள வியாபார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். விக்ரமராச்சி ஆயுர்வேத ஆய்வுக்கூடத்தை பல்கலைக்கழகமாக நாம் உயர்த்த வேண்டும். கம்பஹா மாவட்டம் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் பகுதியாகும். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி விவசாய செய்கையை மேம்படுத்த எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும். நான் எனது பொறுப்பை நிறைவேற்றி, செழிப்பான நாட்டை உருவாக்குவேன்
என கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதியளித்தார். இதேவேளை, தமது ஆட்சிக்காலத்தில் நெல் உற்பத்தி அதிகளவில் காணப்பட்டதால் மத்தளை விமான நிலையத்தை நெல்லால் நிரம்பியதாகவும் அவ்வாறான நாடு தற்போது வௌிநாட்டிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்தார்.