இரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை

இரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை

by Bella Dalima 19-10-2019 | 4:45 PM
Colombo (News 1st) அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் (Christina Koch), ஜெஸிகா மீா் (Jessica Meir) ஆகிய இருவரும் விண்வெளியில் வெள்ளிக்கிழமை (18) நடந்து சாதனை படைத்துள்ளனர். ஆண்கள் துணையில்லாமல் முழுவதும் பெண்களே விண்வெளியில் நடந்து பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வது விண்வெளி ஆய்வு வரலாற்றில் இதுவே முதன்முறை. அமெரிக்க ஆய்வு மையமான நாசாவின் விண்வெளி ஆய்வுகளில் ஆணாதிக்கம் நிலவுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்தக் குறையைப் போக்கும் வகையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பராமரிப்புப் பணியில் முழுவதும் பெண்களைப் பங்கேற்கச் செய்ய நாசா முடிவு செய்திருந்தது. அதையடுத்து, சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் பேட்டரி மாற்றும் பணியில் கிறிஸ்டினா கோச்சையும், ஜெஸிகா மீரையும் பயன்படுத்த நாசா திட்டமிட்டது. இருந்தாலும், இந்த திட்டத்தில் எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. நாசாவிடம் விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படும் ஆண்களுக்கான பெரிய அளவு உடைகள் இருந்தாலும், பெண்களுக்கான நடுத்தர அளவு உடை ஒன்று மட்டுமே இருந்தது. இதனால் இரு பெண்களை ஒரே நேரத்தில் அனுப்புவது இயலாமற்போனது. அதனைத் தொடா்ந்து, மேலும் கூடுதலாக ஒரு நடுத்தர அளவு உடை உருவாக்கப்பட்டு, தற்போது கிறிஸ்டினா கோச்சும், ஜெஸிகா மீரும் விண்வெளி சென்றுள்ளனர். இந்த நிலையில், அவா்கள் இருவரும் விண்வெளியில் நடந்து சர்வதேச விண்வெளி ஆய்கவகத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம், விண்வெளி ஆய்வு வரலாற்றில் அவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.