by Bella Dalima 19-10-2019 | 4:24 PM
Colombo (News 1st) சிலியில் ரயில், பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறியதால் தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிலியில் அரசின் நிர்வாகத்தில் உள்ள ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வைக் கண்டித்து தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரயில்களையும் ரயில் நிலையங்களையும் தாக்கி சூறையாடினர்.
சில பகுதிகளில் ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோ, சக்காபுகோ, பியூண்டே அல்ரோ மற்றும் சான் பெர்னார்டோ உள்ளிட்ட பகுதிகளில் அவசரநிலை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மக்களின் போராட்டத்திற்கு காரணமான உயர்த்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக விவாதித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.