அரச வளங்களை சூறையாடமாட்டேன்; நாட்டையும் மக்களையும் பாதுகாப்பேன் – சஜித் பிரேமதாச வாக்குறுதி

அரச வளங்களை சூறையாடமாட்டேன்; நாட்டையும் மக்களையும் பாதுகாப்பேன் – சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

19 Oct, 2019 | 8:58 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் மாத்தளை இரத்தோட்டை பகுதியில் நடைபெற்றது.

இரத்தோட்டை பொது விளையாட்டரங்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவின் பெறுமதியை 200 வீதத்தால் தாம் அதிகரித்ததாகவும் அதற்கு மேலதிகமாக ஜன சவிய திட்டத்தை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மாளிகை அரசியலைக் கைவிட்டு பாமர மக்களுடன் வீதியில் இறங்கி, வியர்வை வாசத்தை அறிந்து தன்னால் வழங்கக்கூடிய அதிகபட்ச சேவையை நிறைவேற்றுவதற்கு தனது வாழ்க்கையையும் ஆயுளையும் அர்ப்பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்பள்ளி கல்விக்கு அரச அனுசரணை வழங்கி, பெற்றோர் பணம் கொடுத்து முன்பள்ளி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் யுகத்தை நிறுத்துவதாகவும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.

நான் அரச வளங்களை சூறையாடமாட்டேன். திருட மாட்டேன். தரகுக்கூலி பெற மாட்டேன். நான் உங்களுக்கு வாக்குறுதியளிக்கின்றேன். உயிருக்கும் மேலாக எனது நாட்டையும் எனது மக்களையும் பாதுகாப்பேன்

என அவர் பிரசாரக் கூட்டத்தில் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்