மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பில் தயா கமகே சாட்சியம்

by Staff Writer 18-10-2019 | 6:41 PM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அமைச்சர் தயா கமகே இன்று சாட்சியம் வழங்கினார். மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை மற்றும் உபகரணங்களுக்கு சேதமேற்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சி வழங்குவதற்காக அவர் இன்று ஆணைக்குழுவில் ஆஜரானார். நெல்லை களஞ்சியப்படுத்த பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் இதனடிப்படையில், மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதாகவும் அவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார். அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் விமான நிலையத்தின் சொத்துக்கள் தொடர்பான பாதுகாப்பை விமான நிலைய பொறுப்பதிகாரியே உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அது தொடர்பில் தனது உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரியின் பொறுப்பு எனவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று ஆஜராக முடியாது என பிரதமரின் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த மாதம் 23 ஆம் திகதி ஆஜராகுமாறு கடந்த நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்