வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழ

பொதுமக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு

by Staff Writer 18-10-2019 | 5:19 PM
Colombo (News 1st) பொதுமக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் என்பனவற்றை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தொடர்பாடல் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் உள்நாட்டு , வௌிநாட்டு முதலீடுகளினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டவரைபு தயாரிக்கப்படுவதுடன், அதன் 80 வீத பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டவரைபை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். உத்தேச சட்டவரைபில் எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் அவற்றை மதிப்பீடு செய்வதற்கும் குறித்த சுயாதீன ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எந்தவொரு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அவற்றை மதிப்பீடு செய்வதற்கு, இந்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைத்திட்டங்கள் என்பன வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் சுயாதீன ஆணைக்குழுவால் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சுயாதீன ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படும் பொதுமக்களின் நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், அவர்களுக்கு பயனடையும் வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.