Colombo (News 1st) தளம்பல் நிலையிலுள்ள வாக்காளர்களின் புதிய உத்வேகம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று (16) கண்டியில் கருத்து தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றிபெற நிதியும் பாரிய வாக்கு வங்கியும் அரச பொறிமுறையொன்றும் தனிப்பட்ட விம்பமும் அவசியம். மைத்திரிபால சிறிசேனவிடம் அவை காணப்படாத போதும் அவர் வெற்றி பெற்றார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உறுதியான வாக்குகள் 42 இலட்சம் காணப்பட்டன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிக வாக்குகளை வழங்கினர். நாம் ஒரு இலட்சம் வாக்குகளை அளித்தால், 43 இலட்சம் வாக்குகள். அவ்வாறு எனின், 62 அரை இலட்சம் வாக்குகளுக்கு அவர் எங்கு செல்வார்? தளம்பல் நிலையிலுள்ள வாக்காளர்களே இந்த நாட்டின் தேர்தல் சொத்தாகும். அவர்களுக்காகவே நாம் நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம். தளம்பல் வாக்குகளின்றி 50 வீத வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ எடுக்க முடியாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் மாத்திரம் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெற முடியாது என பிரதமர் கூறினார். தற்போது நான் ரகசியமொன்றைக் கூறுகின்றேன். பசில் ராஜபக்ஸ எமது கட்சியின் தலைவர் ஒருவருடன் நான்கு மாதங்களுக்கு முன்னர் பேசியுள்ளார். அவர்களால் 44 வீத வாக்குகளையே அதிகபட்சம் பெற முடியும் எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாம் வாக்கினை தமக்கு வழங்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் வாக்காளர்கள் எமக்கு வாக்கு வழங்க மாட்டார்கள், அவர்களின் சின்னத்திற்கு மாத்திரேமே புள்ளடியிடுவார்கள், அதனால் இரண்டாவது வாக்கிலும் 50 வீதத்தை பெற முடியாது என அவர்கள் அறிவார்கள்.
என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.