நாட்டின் சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைகளை திருத்த எதிர்பார்க்கின்றோம்: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 17-10-2019 | 7:13 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் சுற்றாடல் கொள்கை உடவளவயில் இன்று வௌியிடப்பட்டது. ''நாட்டை செழிப்பாக்கும் எதிர்பார்ப்பு'' என்ற தொனிப்பொருளுக்கு அமைய இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவினால் சுற்றாடல் கொள்கை வௌிடப்பட்டதுடன், மகா சங்கத்தினர், சூழலியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரிய காடுகளான சிங்கராஜா, வில்பத்து உள்ளிட்ட பகுதிகள் அபாயத்திற்குள்ளாகின. யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவை விடவும் அதிகளவான அழிவு சூழல் பாதிப்பினால் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் மணல் அகழும் நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கே சொந்தமாகவுள்ளது. சுரங்கங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. எங்கேனும் காடழிக்கப்பட்டிருந்தால், அது அரசியல்வாதிகளுக்காகவே இருக்கும். கிராமமொன்றில் விவசாய நிலம் அல்லது காணியொன்று நிரப்பப்படுகின்றது எனின், அதன் பின்புலத்திலும் அரசியல்வாதிகளே இருப்பார்கள். எங்கேனும் காடழிக்கப்படுகின்றது எனின், கற்குவாரிகள் முன்னெடுக்கப்பட்டு செல்லப்படுகின்றது எனின், அதன் பின்னணியிலும் அரசியல்வாதிகளே இருப்பார்கள். இந்த ஆட்சியாளர்களினால் சூழலை பாதுகாப்பதற்கு மக்களின் எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடிவதில்லை. அதனால் இந்த சட்டங்களை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தி, அதற்கான ஆணைக்குழுவொன்றை நியமித்து, ஒரு வருடத்திற்குள் இந்த நாட்டின் சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைகளை திருத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்