ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவோம் 

ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு

by Bella Dalima 17-10-2019 | 8:05 PM
Colombo (News 1st) மக்கள் பெரும் துயரை எதிர்கொள்ளக் காரணமான ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். தற்போதுள்ள அரசாங்கத்தைப் போன்று ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசாங்கம் வரலாற்றில் இல்லை என அவர் குற்றம் சாட்டினார். அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பெரும்பாலும் ஊழல் மோசடிகள் குறைவடையும் என கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
அனைத்து மட்டத்திலும் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். என் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வழங்கிய பொறுப்புக்களை நான் 100 நாட்களில் நிறைவேற்றும் ஒருவன். நான் 20 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றியுள்ளேன். அன்று இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதிகளினாலே எனக்கு பாராட்டுக்களும் பதக்கங்களும் கிடைத்தன. அதன் பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கொழும்பை ஆசியாவின் துரிதமாக அபிவிருத்தி அடையும் நகரமாக மாற்ற முடிந்தது. சவால்களை ஏற்றுக்கொண்டு அதனை செயற்படுத்த முடியுமான ஒருவனே நான்.
என அவர் மேலும் தெரிவித்தார். கேகாலையில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். ரம்புக்கனை அஷோக மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, கேகாலை பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி திசாநாயக்க, கேட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்தார்.