குமார வெல்கமவை பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரி மத்துகமயில் சத்தியாகிரகப் போராட்டம்

குமார வெல்கமவை பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரி மத்துகமயில் சத்தியாகிரகப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

17 Oct, 2019 | 9:59 pm

Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஹொரணையில் நேற்று (16) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க வேண்டுகோளொன்றை விடுத்தார்.

வெற்றியீட்டிய பின்னர் புதிய பிரதமரும் புதிய ஜனாதிபதியும் ஹொரணைக்கு மீண்டும் வருமாறு தாம் அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் இதனை விடவும் அதிகக் கூட்டம் காணப்படும். ஏனெனில், அதிகாரம் இருக்கும் போது வருவார்கள் அல்லவா? இவர்கள் இருவரையும் தற்போது சூழ்ந்துள்ள குழுவினரை நான் அவதானிக்கின்றேன். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி, 9 ஆம் திகதி மஹிந்தவை விட்டுச் சென்றனர். தற்போது சிறிது சிறிதாக நெருங்குகின்றனர். இந்த அரசியல் கழிவுகள் எமது மாவட்டத்திலும் காணப்படுகின்றன. அவர்களை மீண்டும் நெருங்க விட வேண்டாம் என உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

என விதுர விக்ரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

அவர் நேற்று அவ்வாறு குறிப்பிட்ட போதிலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் களுத்துறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை பொதுஜன பெரமுனவில் இணையுமாறு கோரி மத்துகம நகரில் சிலர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மத்துகம நகர மத்தியில் இன்று காலை கூடிய சிலர், மத வழிபாடுகளின் பின்னர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தேரர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்திப்பதற்கு குமார வெல்கமவின் புதல்வர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் செனால் வெல்கம வருகை தந்திருந்தார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வருகை தந்து தமது கோரிக்கைக்கு இணங்கும் வரை சத்தியாகிரகப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்