கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத கோட்டாபய: சஜித் பிரேமதாச விமர்சனம்

by Bella Dalima 16-10-2019 | 8:00 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்கள் இன்றும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றன. தொடம்கஸ்லந்த - ரிதிகம பிரதேசத்தில் இன்றைய நாளுக்கான முதலாவது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, எனது எதிர்தரப்பு வேட்பாளர் நேரடியாக சரத் பொன்சேகா பக்கத்திற்கு அவற்றை சுமத்திவிட்டார். பாதகமான விடயங்களுடன் தான் தொடர்புபட மாட்டேன் என அவர் உடனடியாக தீர்மானித்தார். அண்ணாவும் பொறுப்பு அல்ல. போர்க்களத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் வினவப்பட்ட போது, இராணுவத்தளபதியே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என கூறினார். நாட்டின் அரச தலைவராக வருவதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர் இவ்வாறு கதைப்பாராக இருந்தால், தமது நலனுக்காக எப்படி எல்லாம் எமது தாய் நாட்டை வௌிநாடுகளுக்கு விற்பாராக இருக்கும்?
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவின் நேற்றைய ஊடக சந்திப்பு தொடர்பில் ஹிரியால - ஹிரிபிட்டிகம நகரில் நடைபெற்ற கூட்டத்திலும் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, அவற்றிற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக அவர் இடது பக்கம் திரும்பி உதவி கேட்கிறார். வலது பக்கம் திரும்பி மற்றுமொருவரது உதவியை பெற்றுக்கொண்டார். பின்னால் இருந்த சீடர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டார். நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக இருந்தால், ஒவ்வொரு பக்கமாக திரும்பிக்கொண்டிருக்க முடியாது. கேள்வியொன்று கேட்கப்படுகின்ற போது அந்த கேள்விக்கு நேரடியாக பதில்களை வழங்க நாட்டின் அரச தலைவர் தயாராக இருக்க வேண்டும். மின்சாரக் கதிரை என பொய்யுரைத்தனர். நேற்றைய தினம் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களை சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால் எனது எதிர் தரப்பிலுள்ளவர் மின்சாரக் கதிரைக்கு இட்டுச்சென்றார். பிரேமதாசக்களின் இரத்தத்தில் அச்சம், அடிமைத்தனம், காட்டிக்கொடுப்பு, இரட்டைவேடம் இல்லை. சர்வதேசத்திற்கு ஒன்றைக் கூறுகின்றனர். நாட்டில் ஒன்றைக் கூறுகின்றனர்.
இதேவேளை, வாரியபொலயில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு பேரணியிலும் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.