பாதுகாப்பான நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதி

பாதுகாப்பான நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2019 | 8:26 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று பிரசாரக் கூட்டங்கள் சிலவற்றில் உரை நிகழ்த்தினார்.

இன்று முற்பகல் பலாங்கொடை நகர சபை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அதிகளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கட்டாயமாக 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். அத்தோடு, இன்று அநேகமான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீள திறப்பதற்கு தேவையான கடன் மற்றும் வரிச்சலுகைகளை நாம் வழங்குவோம். வௌிநாடுகளில் இருந்து கொண்டுவந்து மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற மிளகையும் நாம் நிறுத்துவோம். இரத்தினக்கல் தொழிற்துறை சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய ஒரே இடமாக ONE STOP SHOP என்ற எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு ஒரு இடத்தை உருவாக்குவோம்.
என வாக்குறுதியளித்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்ட மற்றுமொரு பிரசாரக்கூட்டம் இன்று பிற்பகல் பெல்மடுல்லை பிரதேச சபை விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த பிரசாரக் கூட்டத்தில், பாதுகாப்பான நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதியளித்தார்.

அன்று எமது அரசாங்கத்தின் கீழ் இருந்த பாதுகாப்புத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி, புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீண்டும் அவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்கி நாம் மீண்டும் பாதுகாப்பான நாடொன்றை உங்களுக்கு உருவாக்கிக் கொடுப்போம்

என கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்