தபால் மூல வாக்களிப்பிற்கான அதிகளவு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால் மூல வாக்களிப்பிற்கான அதிகளவு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால் மூல வாக்களிப்பிற்கான அதிகளவு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2019 | 8:00 am

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 78 403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 17918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான தினங்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (15) வௌியிட்டிருந்தது.

அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி தாம் சேவையாற்றும் பிரதேசங்களிலுள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் தமது வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்