இரட்டைக் கொலையாளிக்கு மரண தண்டனை

2012-இல் பாடசாலை மாணவி, தாய் வெட்டிக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

by Staff Writer 15-10-2019 | 3:23 PM
Colombo (News 1st) இரத்தினபுரி - கொட்டகெத்தன பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியொருவரும் அவரின் 52 வயதான தாயும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சியினால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலையைக் கண்ணுற்ற சாட்சிகள் இல்லையென்ற போதிலும், மரபணு பரிசோதனை உள்ளிட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த கொலைச்சம்பவத்தை பிரதிவாதியே முன்னெடுத்துள்ளமை சந்தேகமின்றி நிரூபிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பிரகாரம், பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு வெவ்வேறு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கூரையில் படிந்திருந்த இரத்தக்கரைகளூடாக, சடலங்களில் காணப்பட்ட வெட்டுக்காயங்களின் கொடூரம் புலப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார். கொலை செய்வதை நோக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை 221 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பறிக்கையூடாக நீதிபதி மன்றுக்கு அறிவித்தார். தனது 25 வருட சேவைக்காலத்தில் மிக நீண்ட காலம் செலவளித்து தயாரிக்கப்பட்ட தீர்ப்பறிக்கை இது எனவும் நீதிபதி விக்கும் களுஆராச்சி மன்றில் குறிப்பிட்டுள்ளார். இரத்தினபுரி - கொட்டகெத்தன பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி தாயும் மகளும் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.