மீண்டும் ஜனசவிய திட்டம், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் மதிய போசனம் வழங்கப்படும்: சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Staff Writer 15-10-2019 | 9:02 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று ருவன்வெல்ல, அங்குருவெல்லயில் நடைபெற்றது. இன்று காலை முதல் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டிருந்த சஜித் பிரேமதாசவிற்கு ருவன்வெல்ல பிரதேச மக்கள் அமோக வரவேற்பளித்தனர். இதேவேளை, தெரணியகல நகரில் நடைபெற்ற கூட்டத்திலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார். இதன்போது, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவராக செயற்பட்ட மொஹமட் தீன், சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்தார். இந்தக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பின்வருமாறு உரை நிகழ்த்தினார்
நாங்கள் சமுர்த்தி வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவோம். சமுர்த்தியைத் தவிர ரணசிங்க பிரேமதாசவின் ஜனசவிய தடைப்படாமல் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். பொதுமக்களின் துயர் தொடர்பில் யாரும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய தேவை இல்லை. இந்த வாக்குறுதிகளை பொறுப்பேற்பது வேறு யாருமல்ல சொல்வதையே செய்யும் செய்வதையே சொல்லும் பிரமேதாச என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். சிறு பிள்ளைகள் கிழிந்த சீருடையை அணிந்து கொண்டு பாடசாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அன்றைய தினம் 43 இலட்சம் பாடசாலை பிள்ளைகளுக்கு சீருடையையும் மதிய உணவையும் எனது தந்தை தான் வழங்கினார். இன்று பாடசாலைக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் மதிய ஆகாரத்தை வெட்டி சுகபோகம் அனுபவிக்கின்றனர். 16 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படும் போது இந்த நாட்டின் பாடசாலை பிள்ளைகளுக்கு இரண்டு இலவச சீருடைகள் மற்றும் மதிய உணவை அனைத்து பாடசாலைகளுக்கும் வேறுபாடின்றி பெற்றுக்கொடுப்பேன் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.