ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 513 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 513 முறைப்பாடுகள்

by Staff Writer 15-10-2019 | 10:28 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 513 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று (14) வரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் 15 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 146 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அரச சொத்துக்களைப் பயன்படுத்தியமை, வேலை வாய்ப்புகள் வழங்கியமை, சட்டவிரோத பிரசாரங்கள் தொடர்பில் முறையிடப்பட்டுள்ளதாக தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் குறித்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 60 முறைப்பாடுகள், Paffrel அமைப்பிற்கு கிடைத்துள்ளன. அதிகாரத் துஷ்பிரயோகம், அபிவிருத்தி மற்றும் சுகாதார நலத்திட்டங்கள் குறித்து தமது அமைப்பிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக Paffrel அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சுமார் 160 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.