சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் நாளை உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 15-10-2019 | 8:45 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவுடன் நாளை உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து செயற்படுவது தொடர்பில் மூன்று உடன்படிக்கைகளை கைச்சாத்திடவுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் திகதி உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அந்த உடன்படிக்கை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் 22 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு, தகுதியானவர்களுக்கு தகுந்த இடத்தை வழங்குதல், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியைக் கட்டுப்படுத்துதல், சட்டவாட்சியை பாதுகாக்கும் அரச நிர்வாகம் போன்றவற்றிற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியின் பிரதிநிதிகளுக்கு எவ்வித அநீதியோ மாறுபாடோ காண்பிக்காது பொதுஜன பெரமுனவினால் அவர்கள் பாதுகாக்கப்படுதல், தேர்தல் செயற்பாடுகளுக்கு நியாயமான சந்தர்ப்பங்களை வழங்குதல் மற்றும் சுதந்திரக் கட்சி முன்வைக்கும் விடயங்களை செவிமடுத்தல், தேசிய மற்றும் அரசியல் ரீதியான முக்கிய தீர்மானங்களின் போது, மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை கேட்டறிந்து ஒருமித்த கருத்தில் செயற்படுதல் ஆகியன அந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, வேட்பாளர் பட்டியலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இரு கட்சிகளுடன் இணைந்த அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயற்படவும் இந்த உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.