ஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை

ஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை

ஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2019 | 10:45 am

Colombo (News 1st) ஸிம்பாப்வே மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மீண்டும் உறுப்புரிமை வழங்கியுள்ளது.

துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர், பிரதான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஸிம்பாப்வே கிரிக்கெட் நிறுவன தலைவர் Tavengwa Mukuhlani மற்றும் ஸிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பின் பின்னர் ஸிம்பாப்வே அணிக்கு மீண்டும் உறுப்புரிமை வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஸிம்பாப்வே கிரிக்கெட் நிறுவனத்துக்குள் அரசியல் தலையீடு காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்துக்கு கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்திருந்தது.

எவ்வாறாயினும், அந்தத் தடை நேற்றுடன் தளர்த்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண அனுசரணையில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஸிம்பாப்வேயிற்குக் கிட்டவுள்ளது.

இதனிடையே, நேபாள கிரிக்கெட் நிறுவனத்துக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை 2016 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

நேபாள கிரிக்கெட் நிறுவனத்துக்கான சுயாதீன தேர்தல் நடத்தப்படாமை, அரசியல் தலையீட்டை தடுப்பதற்கு முயற்சிக்காமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்தத் தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இம்மாதம் நேபாள கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தல் நடத்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மீண்டும் நிபந்தனைகளின் அடிப்படையில் நேபாள கிரிக்கெட் நிறுவனத்துக்கு உறுப்புரிமை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்