by Staff Writer 15-10-2019 | 7:33 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின் ஊடாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல், தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது.
தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் சந்தர்ப்பத்தில், குறித்த தற்காலிக அடையாள அட்டை, வாக்காளர் நிலையங்களிலுள்ள அதிகாரியினால் மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்பவர்கள், கிராம உத்தியோகத்தரின் அல்லது தோட்டத் தொழிலாளர் எனின், தோட்ட முகாமையாளரிடம் இருந்து சான்றிதழ் ஒன்றைப் பெற்று அதனை மாவட்டத் தேர்தல் அலுவலகத்திடம் ஒப்படைத்தல் அவசியம்.
இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.