சமையல் எரிவாயு அதிக விலையில் விற்பனை: முறைப்பாடு

சமையல் எரிவாயு அதிக விலையில் விற்கப்படுவதாக முறைப்பாடு

by Staff Writer 15-10-2019 | 11:32 AM
Colombo (News 1st) சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக இதுவரை 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குருநாகல் பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. சமையல் எரிவாயு அதிக விலையில் விற்பனை செய்யப்படுமாயின் அது குறித்து அறிவிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களை அறிவுறுத்தியுள்ளது. 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்வதற்காக, நாடு தழுவிய ரீதியில் விசேட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.