கடந்த காலத்தை விடுத்து எதிர்காலம் தொடர்பில் பேசுவோம்: கோட்டாபய ராஜபக்ஸ விசேட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

கடந்த காலத்தை விடுத்து எதிர்காலம் தொடர்பில் பேசுவோம்: கோட்டாபய ராஜபக்ஸ விசேட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2019 | 8:40 pm

Colombo (News 1st) கடந்த காலம் தொடர்பில் பேசிக்கொண்டு இருப்பதை விட எதிர்காலம் தொடர்பில் பேசுவதே முக்கியமானது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் இன்று நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மஹிந்த அமரவீர ஆகியோரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கேள்வி: 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் அடங்கிய பட்டியலொன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அது தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருப்பீர்கள்?

கோட்டாபய ராஜபக்ஸ: நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுகின்றோம். ஆனால், கடந்த ஆட்சியில் அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் எனக்கு தௌிவில்லை. எமது அரசாங்கத்துடன் எவ்வித விடயமும் கைச்சாத்திடப்படவில்லை. எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் சட்டப்பூர்வமற்றவை என்பதேயாகும்.

கேள்வி: அதாவது நீங்கள் அந்த உடன்படிக்கைகள் தொடர்பில் இணங்கவில்லை. நாடு என்ற வகையில் அவை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்ளவில்லையா?

கோட்டாபய ராஜபக்ஸ: இல்லை. நாம் அந்த உடன்படிக்கைகளை நிராகரித்துள்ளோம். அரசியல் கட்சி என்ற வகையிலும் நாம் அதனை நிராகரித்துள்ளோம். மக்கள் முன்னிலையிலும் அதனை நிராகரித்துள்ளோம். அது நாம் கைச்சாத்திட்ட ஆவணம் அல்ல. இந்த விடயத்தில் முன்பிருந்த அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் பரஸ்பர நிலைப்பாடும் கொள்கையுமே உள்ளது. நாம் ஆட்சியிலிருந்தபோது திட்டம் தொடர்பிலான வரைபொன்றை முன்வைத்தோம். அதற்கமைய குறிப்பிட்ட காலம் செயற்பட்டோம். ஆனால், இந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் அவர்கள் எமது திட்டத்தை ஒதுக்கிவிட்டு தமக்குத் தேவையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினர். நாம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அந்த திட்டத்தையே மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நிறுத்தாது ​தொடர்வோம்.

கேள்வி: அந்தக் காலத்தில் இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவர் என்ற வகையில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என நீங்கள் கூறமுடியுமா? அவர்கள் எங்கே?

கோட்டாபய ராஜபக்ஸ: நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள். நான் இராணுவத்திற்குப் பொறுப்பாக இருக்கவில்லை.

கேள்வி: உங்களது சகோதரர் அல்லவா?

கோட்டாபய ராஜபக்ஸ: இல்லை. இராணுவத் தளபதியே பொறுப்பாக இருந்தார்.

கேள்வி: நீங்கள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்டீர்கள். அதனால் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த கேள்வியை தொடுக்கும் மக்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

கோட்டாபய ராஜபக்ஸ: சரியாக 13,784 பேர் இராணுவத்தில் சரணடைந்தனர். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். அது மாத்திரமல்ல அவர்களில் பெரும்பாலானவர்கள் சிவில் பாதுகாப்புப் படையணியில் உள்வாங்கப்பட்டனர். இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டனர். நானறிந்த வகையில் மிகவும் சிறந்த புனர்வாழ்வுத்திட்டம் எம்மிடமே இருந்தது.

கேள்வி: எனினும், சரணடைந்த அனைவரும் நீங்கள் கூறிய 13,000 பேரில் அடங்கவில்லை என வடக்கிலுள்ள மக்கள் கூறுகின்றனர். அத்துடன், அவர்கள் இன்னமும் வீடு திரும்பவில்லை. அந்த மக்கள் பொய் உரைக்கின்றனரா?

கோட்டாபய ராஜபக்ஸ: இல்லை. எவர் வேண்டுமானாலும் அவ்வாறு கூறமுடியும். அதுவொரு குற்றச்சாட்டு மாத்திரமே. அது குறித்து ஆராய்வதற்கு நாம் ஆணைக்குழுவொன்றை நியமித்தோம். ஆனால் குறித்த நபர்கள் குறித்த நாளில் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எந்தவொரு விடயமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கேள்வி: மக்கள் சரணடைந்த திகதி மற்றும் இடங்களை பரணகம ஆணைக்குழு வழங்கியதல்லவா?

கோட்டாபய ராஜபக்ஸ: இல்லை.

கேள்வியாளர்: ஆம்.

கோட்டாபய ராஜபக்ஸ: நான் நினைக்கவில்லை.

கேள்வி: அடுத்த கேள்வியை நான் மஹிந்த ராஜபக்ஸவிடம் முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்கள். இது தொடர்பாக இன்று பத்திரிகையொன்றும் செய்தி வௌியிட்டுள்ளது. நீங்கள் எத்தகைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப் போகின்றீர்கள். உங்கள் இருவரிடமும் நான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். உங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான தொடர்பு என்ன?

மஹிந்த ராஜபக்ஸ: இன்னமும் அவர்களை நான் சந்திக்கவில்லை. அவர்களை சந்தித்ததன் பின்னர் பதில் வழங்குகின்றேன்.

கோட்டாபய ராஜபக்ஸ: நீங்கள் கடந்த காலம் தொடர்பிலேயே கேள்விகளைக் கேட்கின்றீர்கள். எதிர்காலம் தொடர்பில் கேளுங்கள். நான் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாவதற்கே முயல்கின்றேன்.

கேள்வி: கடந்த காலத்தை நினைவுகூராமல் முன்நோக்கிச் செல்ல முடியுமா?

கோட்டாபய ராஜபக்ஸ: ஆம்.. நிச்சயமாக எம்மால் முடியும்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளீர்களா?

மஹிந்த ராஜபக்ஸ: எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி: இதுவரை அவர்கள் வேண்டுகோள் விடுக்கவில்லையா? நீங்கள் அழைப்பு விடுக்கவில்லையா?

மஹிந்த ராஜபக்ஸ: இரண்டும் நடக்கவில்லை.

கேள்வி: 2015 ஆம் ஆண்டைப் போன்று பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமா?

மஹிந்த ராஜபக்ஸ: அந்த சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஏனெனில், ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் பிரதமர் மாற்றப்படுவார்.

கேள்வி: நீங்கள் கடனை மீளச்செலுத்துவது தொடர்பிலான சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

மஹிந்த ராஜபக்ஸ: மிகவும் தௌிவாக கடன் தொடர்பான பிரச்சினை கடந்த காலத்திலும் வந்தது. நாம் கடனை செலுத்தும் அதேவேளை பொருளாதாரத்தை மேம்படுத்தினோம். இந்த சந்தர்ப்பத்திலும் கடன் வழங்கும் நாடுகளுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடி, கால அவகாசம் பெற்று கடனை மீளச் செலுத்துவதற்கான இயலுமையும் அபிவிருத்தியை தொடர்வதற்கான இயலுமையும் எம்மிடம் உள்ளது.

கேள்வி: உங்களது வௌிநாட்டுக் கொள்கை என்ன? சீனா சார்பாக அரசாங்கம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோட்டாபய ராஜபக்ஸ: நாம் பக்கசார்பற்ற நாடாக செயற்பட ​வேண்டும் என நினைக்கின்றேன். பிராந்தியத்தில் அதிகாரப் போட்டி காரணமாக மோதுகின்ற நாடுகளுடன் நாம் தொடர்புபட முடியாது. நீங்கள் அறிந்த வகையில் நாம் அணிசேரா நாடாக இருக்கின்றோம். எனினும், தற்போதைய நிலையையும் உண்மையில் நாம் எதிர்கொள்ள வேண்டும். பக்கசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

கேள்வி: தேசிய ஒற்றுமை குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பில் உங்களது நோக்கு எவ்வாறு உள்ளது?

கோட்டாபய ராஜபக்ஸ: சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு நாட்டில் வாழும் அனைவருக்கும் நாம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். )

கேள்வி: இலங்கை ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ள அத்துடன் கைச்சாத்திடவுள்ள அமெரிக்க உடன்படிக்கைகள் தொடர்பிலும் உங்களது நிலைப்பாடு என்ன? ACSA மற்றும் SOFA உடன்படிக்கைகள் தொடர்பிலேயே நான் வினவுகின்றேன்.

கோட்டாபய ராஜபக்ஸ: உண்மையில் கூறுவதாயின் நாம் கைச்சாத்திட்ட உடன்படிக்கை முற்றிலும் மாறுபட்டது. அது 10 வருடம் நடைமுறையிலிருந்தது. அதன் மூலம் எவ்வித பாதகமான விடயமும் நிகழவில்லை. அனுகூலங்களே எமக்கு கிடைத்தன. அவர்களுக்கு அல்ல. ஆனால் தற்போதுள்ள உடன்படிக்கையில் அந்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இறைமையுள்ள சுயாதீன நாட்டிற்காகவே நான் எப்போதும் முன்நிற்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, நான் நாட்டிற்கு எதிராக செயற்படப் போவதில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்