தேர்தலில் சர்வதேச தலையீடுகள் குறித்து பசில்

ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தலையீடுகள் இல்லை - பசில் ராஜபக்ஸ

by Staff Writer 14-10-2019 | 8:39 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வகையிலும் சர்வதேச தலையீடுகள் இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ 'த ஹிந்து' பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைவதற்கு ரோ அமைப்பின் தலையீடு இருந்தாக தெரிவிக்கப்பட்டாலும் அந்தத் தேர்தலில் இந்தியா, மற்றைய தரப்பினருக்கு உதவி புரிந்தாக எந்த சாட்சியும் தம்மிடம் இல்லை என பசில் ராஜபக்ஸ தெரிவித்தாக 'த ஹிந்து' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது தரப்பின் குறைபாடுகளை தற்போது நன்கறிந்து கொண்டுள்ளதாக பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தமது நெருங்கிய நண்பர் எனவும் மிக நெருக்கமான நாடு எனவும் பொருளாதார விவகாரம் தொடர்பில் இதன்போது வினவப்பட்டுள்ள கேள்விக்கும் பதிலளிக்கும் போது பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் இந்தியாவுடன் நெருங்கி செயற்பட்டாலும் பொருளாதார பிரச்சினைகளின்போது சீனாவை மறந்துவிட முடியாது எனவும் பசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார். தமது கட்சி அதிகபட்ச அதிகாரப் பகிர்விற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியின் வேட்பாளர் அல்லது யார் ஜனாதிபதியானாலும் மஹிந்த ராஜபக்ஸவே அரசாங்கத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதாகவும் அவரே நாட்டின் மீயுயரான தலைவர் எனவும் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.