கொத்மலை நீர்த்தேக்க தன்னியக்க வான்கதவுகள் திறப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் தன்னியக்க வான்கதவுகள் திறப்பு

by Staff Writer 14-10-2019 | 5:35 PM
Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையினால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தன்னியக்க வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனால், கொத்மலை அணைக்கட்டுக்கு கீழுள்ள கொத்மலை ஓயா நுகவெல, ரிவர்சைட், மாவத்துர மற்றும் மகாவலி ஆற்றின் உலப்பனை பகுதியில் இருந்து கம்பளை, வெலிகல்ல, கெலி-ஓயா, பேராதனை, கட்டுகஸ்தொட்ட, பொல்கொல்ல வரையிலான பகுதிகளில் வாழும் மக்களை மகாவலி ஆற்றினை பயன்படுத்துவது ஆபத்தானது என மகாவலி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. நீராடுவதற்கு அல்லது வேறு தேவைகளுக்காக மகாவலி ஆற்றைப் பயன்படுத்த வேண்டாம் என மகாவலி அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை, நீர்த்தேக்கத்தை அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையுடனான வானிலையால் நில்வளா கங்கையின் நீர்மட்டம் பானதுகம பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மலையகப் பகுதிகளில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புத்தளம் - மன்னார் பழைய வீதியுடனான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. கலாஓயா பெருக்கெடுத்துள்ளமையால், எழுவான்குளம் சப்பாத்துப் பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புத்தளம் - மன்னார் பழைய வீதியைப் பயன்படுத்துவோரை, மாற்றுவீதியைப் பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை மாவட்டத்தின் 3 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.