நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 13-10-2019 | 5:52 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, வெலிமடை பிரதேச சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது, மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெலிமடை பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையை அடுத்து, நேற்றிரவு 9.45 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டிற்குள் அறுவர் உறங்கிக்கொண்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார். அனர்த்தத்தில் வீட்டிற்குள் இருந்த இரண்டு சிறுவர்களும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏனைய மூவரும் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒருவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அனர்த்தத்தில் 10 வயதான சுபுன் குமார, 14 வயதான M.ராமகிருஷ்ணன் மற்றும் 18 வயதான டி.சுரஞ்சனி ஆகியோரோ உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் 15 வயதான எம்.மகேந்திரன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெலிமடை பிரதேச சபை சிற்றூழியரான 21 வயதான எம்.மகேஷ்வரன் தனது மனைவியுடன், பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இந்தத் தம்பதியினரின் சகோதரர்களின் 4 மகன்களும் இவர்களுடன் வந்து நேற்றைய தினம் தங்கியுள்ளனர். தமது வீடுகளில் காணப்படும் இடப்பற்றாக்குறை காரணமாகவே இந்த சிறுவர்கள் இங்கு வந்து தங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே நேற்றிரவு பெய்த பலத்த மழையை அடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, மாத்தறை - மொரவக்க - கொடிகாரகொட பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் மனைவி காயமடைந்துள்ளார். மின்னல் தாக்கியதில் 24 வயதுடைய சிவகுமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன், சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாத்தளை - கம்மடுவ பிரதான வீதியின் பல்லேதென்ன பகுதியில் தொலைபேசி கம்பமொன்று உடைந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திற்குத் தடை ஏற்பட்டது. நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையை அடுத்து, இன்று இந்த தொலைபேசி கம்பம் உடைந்து வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். இதனால் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. பிரதேச மக்கள் இணைந்து தொலைபேசிக் கம்பத்தை வீதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதேவேளை, அனுராதபுரம் - நொச்சியாகம - போகஹவெவ கிராமத்தில் வீசிய பலத்த காற்றினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் நபர் ஒருவர் காயமடைந்துள்தாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.