உறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

by Staff Writer 13-10-2019 | 2:26 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைக்கத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெறாத கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், குறித்த கட்சிகளினால் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிக பட்டியல் மூலம், சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய முடியும் என அவர் கூறியுள்ளார். எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியது. கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும், 7 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சியும் 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் 2 ஆசனங்களைக் கைப்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கான உறுப்பினர்கள், கட்சிகளால் வழங்கப்படும் மேலதிக பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதன்பிரகாரம், தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பிரதேச சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் ஒரே தடவையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்படவுள்ளது. இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர்களின் பெயர்களைத் தெரிவுசெய்து சமர்ப்பிக்குமாறு தேர்லில் வெற்றிபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடி, தகுந்தவர்களை நியமிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.