ஹகிபிஸ் சூறாவளியால் ஜப்பானில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்

by Bella Dalima 12-10-2019 | 8:12 PM
Colombo (News 1st) ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளி காரணமாக 6 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளியின் தாக்கத்தினால் ஜப்பானின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 60 வருடங்களின் பின்னர் ஜப்பான் இத்தகைய பலமான சூறாவளியொன்றை எதிர்கொண்டுள்ளது. மூன்றாம் படிக்குரிய சூறாவளியாகக் கருதப்படுகின்ற ஹகிபிஸ், மணித்தியாலத்திற்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்றது. தலைநகர் டோக்கியோ, ஷிசூகா, கனகாவா, நகோயா, நிகாட்டா உள்ளிட்ட ஜப்பானின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தலுக்கு அமைய அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் ஹக்கோனே நகரில் சுமார் 700 மில்லிமீட்டர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம். ட்டொக்காய் பகுதியில் 600 மில்லிமீட்டரும் ஹொக்குரிகு பகுதியில் 500 மில்லிமீட்டரும் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலுள்ள பல முக்கிய கங்கைகளின் நீர்மட்டம் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் உள்ளதுடன், அநேகமான பகுதிகளுக்கான மின்சார விநியோகமும் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த விமான சேவைகளை இரத்து செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐடா சூறாவளி ஜப்பானைத் தாக்கியதுடன், இதன்போது 1269 பேர் உயிரிழந்தனர். ஐடா சூறாவளியால் 50 மில்லியன் அமெரிக்க டொலுக்கும் மேலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.